
குவாலா குபு பாரு, நவம்பர்-18 சிலாங்கூர், குவாலா குபு பாருவில் உள்ள சுங்கை பெர்த்தாக் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் காணாமல் போன கடைசி நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதால், மொத்தமாக 8 பேர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, 9 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.
எட்டாவது நபரின் சடலம், நேற்று காலை பத்தரை மணியளவில், சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 2.7 கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.
அவர் உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
நவம்பர் ஒன்பதாம் தேதி, சுங்கை லூயிட் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், மலேசியர் ஒருவர் உட்பட 8 ஆடவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் 7 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
சம்பவத்தின் போது, 4 குழுக்களைச் சேர்ந்த 34 பேர் அப்பகுதியில் இருந்த நிலையில், 26 பேர் உயிர் தப்பினர்.
தற்போது 8 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தேடுதல் நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குநர் டத்தோ வான் முஹமட் ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.



