
ரானாவ், நவம்பர்-17,சபாவில் சருகுமான் என நினைத்து 15 வயது சிறுமியை வேட்டைக்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரானாவ், சுங்கை கெலியு பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது, அந்தச் சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஆற்றுப் பகுதியில் மீன் மற்றும் தவளைகளைப் பிடிக்கச் சென்றிருந்தார்.
அப்போது, வேட்டைக்குச் சென்ற 40 வயது ஆடவர் ஒருவர், இருளில் தெரிந்த வெளிச்சத்தைச் சருகுமானின் கண்கள் எனத் தவறாக நினைத்து, வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் அலறல் சத்தம் கேட்டதும், தான் சுட்டது சருகுமான அல்ல, மாறாக சிறுமியை என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
இதில் சிறுமியின் கழுத்து, மார்பு, தோள்பட்டை, கைகள் மற்றும் வலது முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அவரது இடது மணிக்கட்டிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த சிறுமி மேல் சிகிச்சைக்காகக் கோத்தா கினபாலுவிலுள்ள குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறுமியின் உறவினருமான 40 வயது சந்தேக நபரைப் போலீஸ் கைதுச் செய்துள்ளது.
சம்பவத்திற்குப் பின்னர் காட்டில் வீசப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கியைத் தேடும் நடவடிக்கை தொடருகிறது.
இச்சம்பவம் 1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.



