
கோலாலம்பூர், அக்டோபர் 12 – கோலாலம்பூரிலுள்ள ஜாலான் கூச்சிங் (Jalan Kuching) சாலையில் சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த ஆறு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில், ஐந்து வயது சிறுமி உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.
பிற்பகல் 3 மணியளவில், நகர மையத்திலிருந்து செகாம்புட் (Segambut) நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தபோது, பிஒய்டி சீல் (BYD Seal) கார், பெரோடுவா பெஸ்ஸா (Perodua Bezza) காரின் பின்புறத்தில் மோதியது.
இந்த மோதலின் தாக்கத்தால், பெஸ்ஸா கார் மோட்டார் சைக்கிள், நிசான் அல்மேரா (Nissan Almera), டொயோட்டா அல்பார்ட் (Toyota Alphard) மற்றும் பெரோடுவா மைவி (Perodua Myvi) ஆகியவற்றுடன் அடுத்தடுத்து மோதியது.
பெஸ்ஸா காரின் பின்புற இருக்கையில் பயணித்த சிறுமிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக, கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்க மற்றும் விசாரணைத் துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் முகமட் ஸம்சுரி முகமட் ஈசா (Assistant Commissioner Mohd Zamzuri Mohd Isa) தெரிவித்தார்.



