
கோலாலம்பூர், அக்டோபர் 12 – நாடு முழுவதும் அவசர மருத்துவச் சேவையை மேம்படுத்தும் நோக்கில், கூடுதலாக 400 அவசர ஊர்திகளை வாங்குவதற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவையில் பேசிய சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் டுல்கெஃப்லி அகமட் (Dzulkefly Ahmad), உயிருக்கு ஆபத்தான அவசரச் சம்பவங்களுக்கு 15 நிமிடங்களுக்குள் அவசர ஊர்தி சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், 2025ஆம் ஆண்டில் இத்தகைய சம்பவங்களில் 40 விழுக்காட்டிற்கு மட்டுமே இந்த இலக்கை அடைய முடிந்தது. அமைச்சின் இலக்கு 50 விழுக்காடாகும்.
மேலும், ஜெலெபு (Jelebu) மாவட்டத்திற்கு ஐந்து அவசர ஊர்திகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு இந்த ஆண்டில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மேலும் இரண்டு ஊர்திகளைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவசர ஊர்தி சேவையின் செயல்திறனை மேம்படுத்தவும், நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும், அவசர மருத்துவப் பதிலளிப்பு முறையின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.



