
சிங்கப்பூர், மே-15-சிங்கப்பூர் போலீஸார், எதிர்கால அதிவேக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஜெட் சக்தியால் இயங்கும் “பறக்கும் உடைகளை” பயன்படுத்தும் திட்டத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நவீன தொழில்நுட்பம், நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் போலீஸ் படையின் சிறப்பு காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இங்கிலாந்தைச் சேர்ந்த Gravities Industries நிறுவனம் உருவாக்கிய இந்த ஜெட் உடைகள் மூலம், போலீஸார் விரைவாக கப்பல்களில் இறங்கவும், அணுக இயலாத இடங்களுக்கு சில நிமிடங்களிலேயே செல்வதும் சாத்தியமாகும்.
இந்தத் தொழில்நுட்பம் ஆயுத ட்ரோன்களுடன் இணைந்து பயன்படுத்தப்படலாம் என்றும், அதனால் அவசரகால நடவடிக்கைகளில் போலீஸாரின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு மேம்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய உள்துறை அமைச்சர் கே. சண்முகம், “உலகளாவிய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இது போலீஸ் துறையில் ஒரு பெரிய முன்னேற்றம்” எனக் கூறினார்.
இந்த ஜெட் உடைகள் சுமார் 35 கிலோ எடையுடையவை.
மணிக்கு 137 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய இவை, ஒரே முறையில் 3 நிமிடங்கள் வரை இயங்கும் திறன் கொண்டவை.
என்றபோதிலும் பாதுகாப்பு மற்றும் சட்ட ரீதியான ஆய்வுகள் முடிந்த பின்னரே இந்த தொழில்நுட்பம் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படும் என சண்முகம் தெரிவித்தார்.



