Latestமலேசியா

ஜோகூரில் ஓற்றுமை அரசாங்கம் இல்லை; மக்களின் ஆதரவுக்கு பாரிசான் நேஷனல் துரோகம் இழைக்காது -ரவின் குமார்

ஜோகூர் பாரு, மே-18-எதிர்வரும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தனித்து களம் காணவிருக்கிறது. அங்குள்ள மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்கூட்டணி போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்முடிவை ஆதரித்த ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் மாநில ம.இ.கா தொடர்புக் குழுத் தலைவருமான ரவின் குமார், ஜோகூர் மாநில அரசு பாரிசான் நேஷனல் நிர்வாகத்தின் கீழ் மட்டுமே தொடர்ந்து நீடிக்கும் என்றும், மத்தியில் உள்ளதைப் போன்ற ‘ஒற்றுமை அரசாங்க’ கட்டமைப்பு இங்குச் செயல்படுத்தப்படவில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

மேலும், பாரிசான் நேஷனல் மக்கள் வழங்கிய ஆதரவுக்கும் முடிவுக்கும் ஒருபோதும் துரோகம் இழைக்காது எனக் குறிப்பிட்ட அவர், கடந்த தேர்தலில் மக்கள் அளித்த பெரும்பான்மைக்கு ஜோகூர் BN என்றும் உண்மையாக இருக்கும் என்றார்.

மாநிலத்தை ஆட்சிச் செய்ய, ஜோகூர் மக்கள் பாரிசான் நேஷனலுக்கு வழங்கிய ஆதரவு மிகத் தெளிவானது மற்றும் வலுவானது என்றார் அவர்.

மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் தொடர் வளர்ச்சியை உறுதிச் செய்வதற்காகவே, அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் இந்தத் துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரவின் சொன்னார்.

மந்திரி பெசார் டத்தோ Onn Hafiz Ghazi தலைமையிலான தற்போதைய அரசு, மாநிலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும், பொது மக்களின் நலனைப் பேணுவதிலும் காட்டி வரும் தீவிர அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

ஜோகூர் பாரு, ஆஸ்டின் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ம.இ.கா விளக்கமளிப்புக் கூட்டத்தில் அவர் அவ்வாறு பேசினார்.

அதில் மந்திரி பெசார் டத்தோ Onn Hafiz, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், உதவித் தலைவர்கள் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!