Latestமலேசியா

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் தேசிய முன்னணி தனித்துப் போட்டி; மாநில ம.இ.கா முழு ஆதரவு

ஜோகூர், மே-17-ஜோகூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் நிலைத்தன்மையையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அங்குள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் (BN) தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற முடிவுக்கு, ஜோகூர் மாநில ம.இ.கா தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

​மாநில ம.இ.கா தொடர்புக் குழுத் தலைவர் ரவின் குமார் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முடிவு அரசியல் அகங்காரமல்ல; மாறாக, தெளிவான தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய ஒரு வலுவான, அனுபவமிக்க அரசாங்கம் தொடர்ந்து ஜோகூரை வழிநடத்த வேண்டும் என்பதற்கானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

​அரசியல் சூதாட்டங்கள் மூலம் நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும் தேவை ஜோகூருக்கு இல்லை எனக் கூறிய அவர், BN கூட்டணியின் நீண்டகால சேவை மற்றும் அர்ப்பணிப்பை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும், அனைத்து 56 தொகுதிகளிலும் BN கூட்டணியின் வெற்றியை உறுதிச் செய்ய ம.இ.கா தேர்தல் இயந்திரம் முழு வீச்சில் களமிறங்கும் என்றும் ரவின் உறுதியளித்துள்ளார்.

தெங்காரோ சட்டமன்ற உறுப்பினருமான ரவின் குமாரையும் சேர்த்து, ஜோகூர் சட்டமன்றத்தில் ம.இ.கா வசம் 3 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

56 தொகுதிகளிலும் BN தனித்தே போட்டி என மாநில மந்திரி பெசார் டத்தோ Onn Hafiz Ghazi நேற்று அறிவித்திருப்பது, ஒற்றுமை அரசாங்க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம், பாரிசான், பெரிக்காத்தான், பக்காத்தான் ஆகியக் கூட்டணிகளுக்கு இடையில் மும்மமுனைப் போட்டி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!