Latestமலேசியா

பினாங்கில் 28 தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் எஸ்.பி.எம் மாணவர்களுக்கும் பயிற்சி புத்தகம் வழங்கப்பட்டது.

ஜோர்ஜ் டவுன் , டிச 13 – பினாங்கு மாநிலத்தில் 28 தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் 52 இடைநிலைப் பள்ளிகளில் எஸ்.பி.எம் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாடம் குறித்த பயிற்சி புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டன.

பினாங்கு மாக் மண்டின் தமிழ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான தமிழ் மொழி பயிற்சிப் புத்தகங்களை பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ வழங்கினார்.

மொத்தம் 55,000 ரிங்கிட் மதிப்புடைய தமிழ் கருத்துணர்வு, தமிழ் கட்டுரைப் பயிற்சி, தமிழ் இலக்கணம் தொடர்பான புத்தகங்கள் பினாங்கிலுள்ள அனைத்து 28 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 5,330 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நூல்களை குறைந்த வருமானம் பெறும் B40 பிரிவைச் சேர்ந்த 2,699 மாணவர்கள் பெற்றதாக பினாங்கு தமிழ்ப் பள்ளிகளின் சிறப்புக் குழுவின் தலைவருமான சுந்தராஜூ தெரிவித்தார்.

இது தவிர அடுத்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் தமிழ் பாடத்தை எடுக்கவிருக்கும்
52 இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10,000 ரிங்கிட் செலவிலான 600 பயிற்சி புத்தகங்களும் வழங்கப்பட்டன. பினாங்கு மாநிலம் முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தேசிய தொடங்கப் பள்ளியைச் சேர்ந்த 5,930 மாணவர்கள் இந்த பயிற்சி புத்தகங்களை பெறுவதற்காக பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு குழு 65,000 ரிங்கிட்டை செலவிட்டுள்ளது.

பினாங்கு மாநிலத்தில் தமிழ்க் கல்வியை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாக சுந்தராஜூ தெரிவித்தார். மேலும் அடுத்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்கள் அதற்கு தயாராகும் பொருட்டு இந்த பயிற்சி புத்தகங்கள் உதவும் என்றும் சுந்தராஜூ தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!