Latestமலேசியா

தந்தை ஓட்டிய கார் தடம்புரண்டு தீப்பிடித்தது; பல்கலைக்கழக மாணவியான மகள் மரணம்

ரவூப், ஏப்ரல் -14 – பஹாங், ரவூப்பில் தந்தை ஓட்டிச் சென்ற கார் தடம்புரண்டு மரத்தில் மோதித் தீப்பிடித்ததில், சுல்தான் அஸ்லான் ஷா பல்கலைக்கழக மாணவியான மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நோன்புப் பெருநாளைக் கொண்டாடி விட்டு குடும்பத்தோடு ரவூப்பில் இருந்து பெட்டாலிங் ஜெயா திரும்பும் போது சனிக்கிழமை அதிகாலை ஜாலான் உலு கெலி-ஜெலு சாலையில் அவ்விபத்து நிகழ்ந்தது.

நூருல் இஸாதி யூனுஸ் எனும் 23 வயது அம்மாணவி நொறுங்கியக் காரினுள் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

மகளின் கையைப் பிடித்து தந்தை வெளியே இழுக்க முயன்றும், கார் தீப்பற்றிக் கொண்டதால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

காயமடைந்த மேலும் இருவர் ரவூப் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடம் வந்துச் சேர்ந்த தீயணைப்பு மீட்புத் துறை 10 நிமிடங்களில் தீயை அணைத்தது.

எனினும் முழுவதுமாக எரிந்துப் போன புரோட்டோன் சாகா காருக்குள் இருந்து உடல் கருகிய நிலையில் தான் நூருல் இஸாதியை மீட்க முடிந்தது.

கவனக்குறைவாக வாகனமோட்டி மகளுக்கு மரணத்தை விளைவித்ததாக 66 வயது காரோட்டி மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு அவர் விசாரிக்கப்படுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!