
கோலாலாம்பூர், ஜூலை-27-‘தானா மெலாயு’ குறித்த தமது பிரச்சார உரை, மலாய்க்காரர் அல்லாத சமூகத்தினரின் குடியுரிமையையோ அல்லது அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளையோ கேள்வி கேட்கும் நோக்கம் கொண்டதல்ல எனக் கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று வெளியிட்ட அறிக்கையில், மலேசியக் குடியுரிமை பெற்ற சீனர் மற்றும் இந்தியச் சமூகத்தினர் இந்நாட்டுக்கு விசுவாசமானவர்கள் என்றும், மலேசியாவே அவர்களின் தாய்நாடு என்றும் சனுசி சுட்டிக்காட்டினார்.
தமது உரை மலாய்க்காரர்களின் வரலாற்றுப் பின்னணியையும், அவர்களின் அரசியல்-பொருளாதார நிலை குறித்த கவலையையும் மட்டுமே பிரதிபலித்தது என்றார் அவர்.
எனவே, மலாய்க்காரர் அல்லாதோரை நாட்டை விட்டு வெளியேறுமாறு தாம் ஒருபோதும் கூறவில்லை என்றும், அனைத்து இனத்தவருடனும் மலாய்க்காரர்கள் அமைதியாகவும் இணக்கமாகவும் வாழ முடியும் என்பதையே தாம் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறிய அவர், பல்லினச் சமூகத்தின் அமைதியை நிலைநிறுத்துவது அவசியம் என்றார்.
“இந்தியர்களுக்கும் சீனர்களுக்குமாவது இந்தியா – சீனா என பூர்வீக நாடுகள் உள்ளன; ஆனால் மலாய்க்காரர்களுக்கு ‘தானா மெலாயு’ என்ற இந்த மலாய் மண் மட்டுமே உள்ளது” என சனுசி, நெகிரி செம்பிலான் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த தன்னிலை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



