
கோத்தா பாரு, ஆகஸ்ட்-3-தென் தாய்லாந்தில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மலேசியாவுக்குத் தப்பி வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கிளந்தான் போலீஸ் மறுத்துள்ளது.
தாய்லாந்து தரப்பிலிருந்து இதுவரை இதற்கான எந்தவொரு ஆதாரமும் வழங்கப்படவில்லை என மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ Yusoff Mamat தெரிவித்தார்.
சிறப்புப் பிரிவு மற்றும் மாவட்டக் போலீஸ் தலைமையகங்கள் நடத்திய தீவிரக் கண்காணிப்பில், எல்லை வழியே எவரும் ஊடுருவியதாகக் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், தாய்லாந்து அதிகாரிகளிடம் உறுதியான தகவல்கள் இருந்தால், அதை உடனடியாகப் பகிர்ந்துகொள்ளுமாறும், அதன் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்க மலேசியப் போலீஸ் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், சட்டவிரோத எல்லை வழிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு அடைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வேளையில், எல்லையில் தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ள 90 கிலோ மீட்டர் பாதுகாப்பு வேலி அமைக்கும் திட்டத்தை வரவேற்பதாகக் கூறிய அவர், மலேசியா தரப்பில் 3.04 பில்லியன் ரிங்கிட் செலவில் பாதுகாப்புச் சுவர் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், அது 2029-க்குள் நிறைவடையும் என்றும் குறிப்பிட்டார்.



