
பேங்கோக், ஆகஸ்ட்டு 23 – 15 ஆண்டுகள் கடல் கடந்து வாழ்ந்த, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, நேற்று தாயகம் திரும்பியவுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தக்சினின் பியூ தாய் (Pheu Thai) கட்சியின் வேட்பாளர் பிரதமராக பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.
பழைய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், தக்சின் எட்டாண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென, தாய்லாந்து உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
எனினும், அவரது Pheu Thai கட்சி ஆட்சி அமைத்துள்ளதோடு, தக்சின் கைதுச் செய்யப்பட்டது தொடர்பில், அவர்களுக்கு இடையில் ஒப்பந்தம் இருப்பதாக வதந்திகள் நிலவுவதால், தக்சின் எவ்வளவு காலம் சிறையில் இருப்பார் என்பது தெளிவாக தெரியவில்லை என கூறப்படுகிறது.
74 வயது கோடிஸ்வரரான தக்சின், உள்நாட்டு நேரப்படி நேற்று காலை, தனியார் விமானம் வாயிலாக, பேங்கோக் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, நூற்றுக்கணக்கான “சிவப்பு சண்டை” ஆதரவாளர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
தக்சின் தரையிறங்கிய சில மணி நேரங்களில், பியூ தாய் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்கு தொழிலதிபர் ஸ்ரேத்தா தவிசினை (Srettha Thavisin) பிரதமராக அங்கீகரித்தது தாய்லாந்து நாடாளுமன்றம்.
தாய்லாந்து அரசியலில், மறுபிரவேசம் செய்திருக்கும் தக்சினின் அவதாரமாக ஸ்ரேத்தா கருதப்படுகிறார்.