
ஷா ஆலாம் – ஆகஸ்ட்-8 – 2026 சிலாங்கூர் சுக்மாவிலிருந்து சிலம்ப விளையாட்டு நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகிய நிலையில், இந்தியர்களின் அந்தத் தற்காப்புக் கலை உள்ளிட்ட 3 விளையாட்டுகளை மீண்டும் சேர்க்க, மாநில அரசு தற்போது பரிந்துரைத்துள்ளது.
Petanque, Muaythai ஆகியவை ஏனைய 2 விளையாட்டுகளாகும். கூடுதலாக சில விளையாட்டுகளைச் சேர்க்குமாறு விளையாட்டுச் சங்கங்கள் மேல்முறையீடு செய்ததை அடுத்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைகளுக்கான சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் Mohd Najwan Halimi இன்று வெளியிட்ட அறிக்கையில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
என்றாலும், இது வெறும் பரிந்துரை மட்டுமே; ஆகஸ்ட் 15-ஆம் தேதி இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் கூடும் சுக்மா உச்சமன்றக் கூட்டத்தின் போதே எந்தவோர் இறுதி முடிவும் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இவ்விஷயத்தை இனவிவகாரமாக்கி விளையாட்டில் அரசியலைக் கலக்க வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, நாடு தளுவிய அளவில் ஆயிரக்கணக்கான சிலம்பம் பயிலும் போட்டியாளர்களின் கனவை சிதைக்காமல் நல்ல முயற்சியை முன்னெடுத்துள்ள ஆட்சிக் குழு உறுப்பினர் Mohd Najwanநுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ்.
அதே சமயத்தில், இவ்விவகாரத்தை முன்னிருத்தி போராடிய அனைத்து தரப்பினருக்கும் தனது பாரட்டையும் அவர் சமர்ப்பித்தார்.
இது நமது பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தின் அடையாளத்தை நிலைநிறுத்த கிடைத்த வெற்றியென அவர் குறிப்பிட்டார்.