
உலு சிலாங்கூர், செப்-14-சிலாங்கூர், கோலா குபு பாருவில் உள்ள Sungai Pertakக்கில் நேற்று திடீரென நீர்ப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து குழந்தை உட்பட 14 பேர் ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்டு தவித்தனர். எனினும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மாலை 5.03 மணியளவில் அச்சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, கோலா குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு தீயணைப்பு வாகனமும் ஐந்து வீரர்கள் கொண்ட குழுவும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் Ashrul Riezal Asbar தெரிவித்தார்.
13 பெரியவர்கள், ஒரு குழந்தை என மொத்தம் 14 பேர் ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்டிருந்தனர். திடீர் நீர்ப் பெருக்கத்தால் அவர்களால் ஆற்றைக் கடக்க முடியவில்லை.
அவர்களை மீட்க, பாத்தாங் காலி தன்னார்வ தீயணைப்புப் படையினரும் உதவினர். ஆற்றைக் கடக்கும் மீட்பு உத்தியின் வாயிலாக சிக்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக ஆற்றங்கரைக்கு அழைத்து வரப்பட்டதாக Ashrul Riezal கூறினார்.



