Latestமலேசியா

துன் சம்பந்தன் அறநிதி வாரியத்தின் உபகாரச் சம்பளம், கல்விக் கடனுதவிக்கு விண்ணப்பங்கள் திறப்பு; செப்டம்பர் 15 இறுதிநாள்

கோலாலம்பூர், ஆகஸ்ட்.17- மேற்படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கான 2026ஆம் ஆண்டின் உபகாரச் சம்பளம் மற்றும் கல்விக் கடனுதவிக்கான விண்ணப்பங்களை துன் சம்பந்தன் அறநிதி வாரியம் தற்போது திறந்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிநாள் செப்டம்பர் 15ஆம் தேதியாகும்.

தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கமான NLFCS-இன் கீழ் செயல்படும் துன் சம்பந்தன் அறநிதி வாரியம், உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உபகாரச் சம்பளமும் கல்விக் கடனுதவியும் வழங்கி வருகிறது.

அரசாங்க அல்லது தனியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பை பயிலும் மலேசிய குடியுரிமை பெற்ற மாணவர்கள் இந்த உதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

உபகாரச் சம்பளம் மற்றும் கல்விக் கடனுதவியைப் பெற மாணவர்கள் என்னென்ன தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்து வணக்கம் மலேசியாவிடம் விளக்கினார் துன் சம்பந்தன் அறநிதி வாரியத்தைச் சேர்ந்த சுதா.

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும், அந்த உதவி ஒருமுறை மட்டுமே வழங்கப்படுமா அல்லது படிப்புக் காலம் முழுவதும் தொடருமா என்பது குறித்தும் அவர் விளக்கினார்.

இதனிடையே, உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் ஆண்டுதோறும் மூவருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

எந்தெந்த துறைகளில் அல்லது எந்த வகையான மேற்படிப்புகளைத் தொடரும் மாணவர்கள் இந்த உபகாரச் சம்பளத்திற்குத் தகுதி பெறுவர் என்பது குறித்தும் சுதா விவரித்தார்.

உபகாரச் சம்பளம் அல்லது கல்விக் கடனுதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பப் படிவத்தைக் கோரலாம். அந்தப் படிவம் விண்ணப்பதாரரின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதேவேளையில், துன் சம்பந்தன் அறநிதி வாரிய அலுவலகத்திற்குச் நேரடியாகச் சென்றும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அலுவலகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களையும் மாணவர்கள் இணைக்க வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் முழு விவரங்களும் விண்ணப்பப் படிவத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் என சுதா தெரிவித்தார்.

ஆண்டுதோறும் மூன்று மாணவர்களுக்கு மட்டுமே உபகாரச் சம்பளம் வழங்கப்படுவதால், தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களின் உயர்கல்விப் பயணத்திற்கு தேவையான உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, தகுதியுடைய மாணவர்கள் தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து, செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க மறவாதீர்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!