
அலோர் ஸ்டார், ஜன 24 – தைப்பூசத்தை முன்னிட்டு , கெடா மாநிலத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 18 -ஆம் தேதி நடைபெற்ற மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் அந்த சிறப்பு விடுமுறையை வழங்க இணக்கம் காணப்பட்டதாக , கெடா மெந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முஹம்மட் சனூசி நோர் ( Datuk Seri Muhammad Sanusi Md Nor) தெரிவித்தார். இந்துக்கள் தங்களது மிகப் பெரிய சமய விழாவினை குடும்பத்தாருடன் வரவேற்பதற்காக அந்த விடுமுறை வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
இவ்வேளையில், இந்த சிறப்பு விடுமுறை ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கப்படுவதால், பிற இனத்தவரும் அந்த விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள் என சனூசி நம்பிக்கை தெரிவித்தார்.
கெடாவில் 2021 -ஆம் ஆண்டில் தைப்பூசத்துக்கு விடுமுறை வழங்கப்படாததை அடுத்து, அப்போது அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அந்த விடுமுறை வழங்கப்படாததால் , இந்துக்களின் உரிமை மறுக்கப்பட்டதாக அர்த்தமாகாது; மாறாக அப்போது PKP -மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருந்ததால் , மக்கள் ஏற்கனவே விடுமுறையில் இருப்பதாக சனூசி கூறியிருந்த காரணம் பெரும் சர்ச்சையானது.