Latestமலேசியா

நாட்டிலுள்ள தாய்மொழிப் பள்ளிகள் மதிக்கப்பட வேண்டும் – பிரதமர் வலியுறுத்தல்

ஜோகூர்பாரு, மே 27 – நீண்ட காலமாக தமிழ் – சீனப் பள்ளிகள் நாட்டில் இயங்கி வரும் நிலையில், அதனை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

‘தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் உட்பட அனைவருக்குமான தேசியப் பள்ளிகளையும் நாம் கொண்டிருக்கின்றோம். இப்பள்ளிகள் நாட்டின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கிறன. சில இடங்களில் 100 % விழுக்காடு மலாய்க்காரர்கள் உள்ளனர். இதர சில பகுதிகளில் இந்தியர்களும் சீனர்களும் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.

அதனால், தாய்மொழிப் பள்ளிகள் மாற்றப்படத் தேவையில்லை. அதில் நமது பணியானது அவற்றுக்கு இடமளிப்பது, புரிந்துகொள்வதும் மதிப்பளிப்பதுதான்’ என கடந்த சனிக்கிழமை ஜோகூர் பாருவில் நடந்த தேசிய ஒற்றுமை வாரக் கொண்டாட்டத்தில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இனம், தோல் நிறம், மொழி ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை குர்ஆன் ஏற்றுக் கொள்கிறது என்பதை மலாய் முஸ்லிம்கள் நிராகரித்துவிட முடியாது என பிரதமர் சுட்டிக்காட்டினார். ‘நாம் வெவ்வேறு இனங்கள், பழங்கூடியினர், வட்டாரங்கள், மாநிலங்கள், தோல் நிறம், மொழிகளிலிருந்து வந்தவர்கள். இதனை உணர்ந்து ஒருவரையொருவர் மதிக்க வேண்டியதன் அவசியத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது’ என்று நினைவுறுத்தினார்.

இதனிடையே, நாட்டில் உள்ள தாய்மொழிப்பள்ளிகளை முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் மாதத்தில் அம்னோ இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அக்மால் சாலே கூறியதை தொடர்ந்து இந்த பிரச்சனை மீண்டும் துளிர்விட்டிருந்தது.

தாய்மொழிப்பள்ளிகளால் தேசிய கல்வி கொள்கையில் நிறைய பாகுபாடுகளும் இன பதற்றமும் ஏற்படுகின்றன என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், தாய்மொழிப் பல்ளிகளை மறுசீரமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், 1996ஆம் ஆண்டின் கல்வி சட்டத்தின் அடிப்படையில் இந்த நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட தாய்மொழிப்பள்ளிகளை அரசு தொடர்ந்து நிலைநாட்டி வரும் என்று கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!