Latestமலேசியா

நான் ஒன்றும் தலையாட்டி பொம்மை அல்ல; இனிமேல் தான் என் ஆட்சியைப் பார்க்கப் போகிறீர்கள் – மாமன்னர் பொளேர்

கோலாலம்பூர், மார்ச்-20 நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் மிகப் பெரியப் பொறுப்பை மலாய் ஆட்சியாளர்கள் தம்மிடம் ஒப்படைத்திருப்பதாக, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.

“ நீங்கள் கூழைக் கும்பிடு போடுவதற்கு நான் ஒன்றும் பொம்மை அல்ல. நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் வெறும் அலங்கரிப்புப் பொருளுமல்ல. அமைச்சர் பெருமக்களின் ஆணை அனைத்திற்கும் அடிபணிபவனும் அல்ல’ என தனக்கே உரித்தான கண்டிப்பான தோரணையில் மாமன்னர் சொன்னார்.

“நாட்டுத் தலைவராக நான் பதவியேற்று இன்னும் இரு வாரங்களில் இரண்டு மாதங்களை நிறைவுச் செய்யவுள்ளேன். அதோடு ‘தேனிலவு’ முடிகிறது. அதன் பிறகு தான் எனது உண்மையான ஆட்சி பாணியை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்” என்றார் அவர்.

இஸ்தானா நெகாராவில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற 2024-ஆம் ஆண்டுக்கான கூட்டரசு பிரதேச கௌரவப் பட்டங்களையும் விருதுகளையும் எடுத்து வழங்கும் நிகழ்வில் மாமன்னர் அவ்வாறு உரையாற்றினார்.

அவ்விருதுகளும் பட்டங்களும் கூட்டரசு பிரதேசத்துக்கு ஆற்றிய அளப்பரியச் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் உரியவர்களுக்கு வழங்கப்பட்டதாக சுல்தான் இப்ராஹிம் சொன்னார்.

அதுவும், தேர்வுக் குழு முன்மொழிந்தப் பட்டியலை தாமே நேரில் அலசி ஆராய்ந்து, இவ்வாண்டு 36 பேர் மட்டுமே அவ்விருதுகளுக்குத் தகுதியானவர்கள் என முடிவு செய்ததாகவும் மாமன்னர் கூறினார்.

ஜனவரி 31-ஆம் தேதி நாட்டின் 17ஆவது மாட்சிமைத் தங்கிய மாமன்னராக பொறுப்பேற்ற சுல்தான் இப்ராஹிம், கண்டிப்புக்கு பெயர் பெற்றவர் என்பது நாடறிந்த விஷயமாகும்.

இந்நிலையில், இனி மேல் தான் என் ஆட்சி பாணியை பார்க்கப் போகிறீர்கள் என அவரே கூறியிருப்பது, மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையையும், அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு வித கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என சொன்னால் மிகையில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!