Latestமலேசியா

படிப்பைத் தொடரச் சென்ற இடத்தில் நேர்ந்த கோரம்: கிளந்தானில் 61 கத்திக் குத்துகளுடன் மாணவி சடலமாக மீட்பு

கெத்தேரே, மே-2,

மகள் படித்துப் பெரிய ஆளாக வருவாள் என ஆசை ஆசையாய் கல்லூரிக்கு அனுப்பி வைத்த ஒரு குடும்பத்திற்கு, பேரிடியாக வந்து சேர்ந்துள்ளது அந்த மாணவியின் கொடூர மரணச் செய்தி…

ஆம், கிளந்தானில் 19 வயது மாணவி ஒருவர் 61 கத்திக்குத்துகளுடன் கொடூரமான முறையில் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

பேராக்கைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி Nurfisya Zulkifly கெத்தேரே பகுதியில் உள்ள வயல்வெளிச் சாலை ஒன்றில் வியாழக்கிழமை நள்ளிரவு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அவரது உடலில் 61 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருப்பதை போலீஸார் உறுதிச் செய்துள்ளனர்.

​கடந்த வார சனிக்கிழமை தான் தனது மூன்றாவது பருவ படிப்பைத் தொடர, குடும்பத்தினரால் கல்லூரியில் விடப்பட்டார் Nurfisya.

இந்நிலையில் “இவ்வளவு சீக்கிரம் அவர் பிணமாக மீட்கப்படுவார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை” என அவரது சகோதரர் Mohd Faris Zulkifly கண்ணீர் மல்கக் கூறினார்.

அண்மையில் ​வீட்டுக்கு விடுமுறைக்கு வந்திருந்தபோது, தனக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டதைத் தவிர, அவரிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை என Faris மேலும் கூறினார்.

தனது மகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமையை அறிந்த அவரது பெற்றோர் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

​இதனிடையே, Nurfisya படுகொலை தொடர்பில் முதன்மை சந்தேக நபர் உட்பட 4 பேர் கைதாகியுள்ளனர்.

கொலைக் குற்றத்திற்கான குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுவதாக கிளந்தான் போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!