
கூச்சிங், ஜூலை-4-நாட்டில் பதின்ம வயதினரிடையே திருமணத்திற்கு முந்தைய கர்ப்பங்கள் ஏற்படுவது ஒரு தொடர்ச்சியான சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது குறித்து அரசாங்கம் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
2019 முதல் 2024 வரையிலாலக் காலக்கட்டத்தில், 10 முதல் 19 வயதிலான 21,114 சிறுமிகள், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடைந்து அரசாங்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புள்ளிவிவரங்கள், நிலைமை இன்னும் தீவிரமடைந்திருப்பதை உணர்த்துவதாக, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரி இது குறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சவாலை எதிர்கொள்ள, வெறும் புள்ளிவிவரங்களுக்கு அப்பால் ஒரு முழுமையான அணுகுமுறை தேவை என அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, பெற்றோர், கல்வி நிலையங்கள் மற்றும் சமூகத்தின் பங்களிப்பு இதில் மிக முக்கியமானது.
இளம் வயதினருக்குத் தெளிவான இனப்பெருக்க ஆரோக்கியக் கல்வி வழங்கப்பட வேண்டும்; அவர்களின் முடிவுகள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும், நெருக்கடியான நேரங்களில் சரியான வழிகாட்டுதலைப் பெறுவதற்கும் வலுவான ஆதரவு அமைப்பு அவசியம் என அமைச்சர் சுட்டிக் காட்டினார்.”
பதின்ம வயதினர் தங்களை தனித்து உணரக்கூடாது என்றும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவது அனைவரின் கடமை என்றார் அவர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தப் பிரச்சனையைத் தடுக்க, விழிப்புணர்வும் வலுவான குடும்ப உறவுகளுமே மிகச்சிறந்த தற்காப்பு அரணாக இருக்கும் என நேன்ஸி மேலும் கூறினார்.



