
பத்து பஹாட், செப்-8-ஜோகூர், Parit Rajaவில் வீடொன்றில் நிகழ்ந்த கொள்ளை முயற்சியின் போது தமது 71 வயதுடைய அத்தையை கோல்ஃப் மட்டையால் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் 28 வயது பெண் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
டத்தின் பட்டத்தைக் கொண்ட அம்மாது நேற்று வீட்டில் தனியாக இருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் வீட்டிற்குள் நுழைந்து அவரை கோல்ஃப் மட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதில் அவருக்கு தலை மற்றும் இரு மணிக்கட்டுகளில் கடுமையாகக் காயம் ஏற்பட்டது.
அம்மாது உதவி கேட்டு அலறியதைத் தொடர்ந்து, அப்பெண் கோல்ஃப் மட்டையுடன் அங்கிருந்து தப்பியோடியதாகத் தெரிவிக்கப்பட்டது. அண்டை வீட்டுக்காரர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த அம்மாதுவைக் கண்டு காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.
காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் சந்தேக நபரைக் கைது செய்ததுடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கோல்ஃப் மட்டையையும் பறிமுதல் செய்தனர். கடன் சுமையைத் தீர்க்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலையால்தான் கைதான பெண் அச்செயலில் ஈடுபட்டது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேல் விசாரணைக்காக அப்பெண் ஐந்து நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இதனிடையே சம்பவத்தில் காயமடைந்த மாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



