கோலாலம்பூர், நவம்பர்-30, நாட்டில் 9 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100,000 பேரைத் தாண்டியுள்ளது.
இன்று காலை 7.30 மணி வரைக்குமான சமூக நலத்துறையின் பேரிடர் தகவல் மையத்தின் தகவலின் படி, 120, 246 பேர் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
கிளந்தானில் மட்டுமே சுமார் 25,000 குடும்பங்களைச் சேர்ந்த 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு 10 மாவட்டங்களில் 279 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
திரங்கானுவிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,000 பேரைத் தாண்டியது.
அங்கு 8 மாவட்டங்களில் மொத்தமாக 8,700 குடும்பங்கள் பாதிக்கப்படுள்ளன.
கெடாவில், 1,400-கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4,562 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தென் மாநிலங்களிலும் வெள்ளப் பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.
ஆக அதிகமாக நெகிரி செம்பிலானில் 2,253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜோகூரில் 336 பேரும் மலாக்காவில் 228 பேரும் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
பெர்லிசில் 488 பேர் பாதிக்கப்பட்ட வேளை, பேராக்கில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனமான NADMA-வின் தகவலின் படி, கிளந்தானில் இரண்டும், திரங்கானுவில் ஒன்றுமாக இதுவரை 3 வெள்ள உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.