
கோலாலம்பூர், ஜூன்-8– பிலிப்பைன்ஸின் தெற்கு மிண்டனாவோ (Mindanao, Filipina) பகுதியில் இன்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டாவாவோ (Davao) நகரிலிருக்கும் 59 மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
டாவாவோவில் உள்ள மலேசிய துணைத் தூதரகமும், மணிலாவில் உள்ள மலேசிய தூதரகமும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் பின்னதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், கடற்கரைப் பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், டாவாவோ நகரில் பள்ளிகளும் அரசு அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு ஆய்வுகளுக்காக சில உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.



