ஆராவ், டிச 17 – புதிதாகத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிக் கட்டிடங்களும் வெள்ளம் மற்றும் இதர இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாப்பான இடங்களில் கட்டப்படுவதை உறுதி செய்வதே கல்வி அமைச்சின் நோக்கமாகும். வெள்ளம் போன்ற பேரழிவுகள் பள்ளி செயல்பாடுகளை சீர்குலைத்து பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதால், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் ( Fadlina Sidek ) தெரிவித்திருக்கிறார். இயற்கை பேரழிவுகளில் காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கத்தை கருத்தில் கொண்டு இது மிகவும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார். இயற்கை பேரிடர் மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் நேரடியாக கல்வியை சீர்குலைக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகள் மாணவர்களை மட்டுமல்ல, ஆசிரியர்களையும் பாதிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்கட்டமைப்பு மேம்பாடு மட்டுமல்ல, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவருக்கும் பாதுகாப்பான சூழலை வழங்குவதாகும். புதிய பள்ளிகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்கள் பாதுகாப்பான மற்றும் உயரமான பகுதிகளில் இருக்க வேண்டுமென இன்று
SMKA Arau பள்ளிக்கு வருகை புரிந்த பின் செய்தியாளர்களிடம் பட்லினா
கூறினார். அதோடு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பராமரிப்புப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு கல்வி அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.