Latestமலேசியா

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் பெர்சாத்து நீடிக்கும்; மாநிலத் தேர்தல்களில் PN சின்னத்தையே பயன்படுத்துவோம் – முஹிடின் திட்டவட்டம்

கோலாலம்பூர், ஜூன்-17-​பெர்சாத்து கட்சி, பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிக்கும்…

அதே சமயம், வரவிருக்கும் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் அந்தக் கூட்டணியின் சின்னத்திலேயே அது போட்டியிடும்.

​நேற்றிரவு நடைபெற்ற கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எட்டப்பட்டதாக அதன் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

பெரிக்காத்தான் கூட்டணியின் முதன்மை நிறுவனர்களில் ஒருவராக பெரசாத்து விளங்குவதால், எந்தவொரு தரப்பும் தன்னிச்சையாக தங்களை இக்கூட்டணியில் இருந்து நீக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

​பெர்சாத்து கட்சியுடனான அரசியல் உறவை முறித்துக் கொள்வதாக அண்மையில் பாஸ் கட்சி எடுத்த முடிவைத் தொடர்ந்து எழுந்த பல்வேறு அரசியல் யூகங்களுக்கு, இம்முடிவு தற்பொழுது முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.

பெர்சாத்துவுடன் பாஸ் கட்சிக்கு இனி உறவு இல்லை என்பதால், பெரிக்காத்தானில் அது நீடிப்பதும் வெளியேறுவதும் மற்ற உறுப்புக் கட்சிகளான கெராக்கான், MIPP ஆகியவற்றின் முடிவுகளைப் பொருத்து அமையும் என பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் முன்னதாகக் கூறியிருந்தார்.

அதே சமயம் பெர்சாத்து தானாகே வெளியேறுவதே அதற்கு மரியாதை என பாஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் வெளிப்படையாகவும் சூசகமாகவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், அடுத்த பெரிக்காத்தான் உச்மன்றக் கூட்டத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதற்கிடையில், தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை பெர்சாத்து கட்சி தற்பொழுது தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் முதல்கட்டமாக, ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான தேர்தல் இயந்திரத்தின் தொடக்க விழா வரும் ஜூன் 21-ஆம் தேதி மூவார், பக்ரியில் நடைபெறவிருக்கின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!