6 உலகக் கிண்ணங்களில் விளையாடிய முதல் வீரர்: வரலாறு படைத்த மெஸ்சி

கான்சஸ் சிட்டி, ஜூன்-17 – அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி (Lionel Messi), உலகக் கிண்ண காற்பந்து வரலாற்றில் ஆறு உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடிய முதல் வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
38 வயதான மெஸ்சி, 2026 உலகக் கிண்ணத்தில் அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்த வரலாற்றை உருவாக்கினார்.
அதே நேரத்தில், அவர் அர்ஜென்டினா அணிக்காக தனது 200வது சர்வதேச போட்டியிலும் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2006-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் முதன்முறையாக கால் பதித்த மெஸ்ஸி, 2022-ஆம் ஆண்டு கத்தார் உலகக் கிண்ணத்துக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக கூறியிருந்தார்.
பின்னர் தனது முடிவை மாற்றி தொடர்ந்து விளையாடி வருகிறார்.
2022 உலகக் கிண்ணத்தில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்த மெஸ்சி, தற்போது அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் (MLS) தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இதற்கிடையில், போர்த்துக்களின் நட்சத்திர காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடினால், மெஸ்சியைப் போன்று ஆறு உலகக் கிண்ண தொடர்களில் விளையாடியவர் எனும் சாதனையை அடைவார்.



