
கோலாலம்பூர், ஜூன்-17 – மலேசிய அரசுப் பல்கலைக்கழகங்களில் பணக்காரர்களுக்கு இடங்கள் விற்கப்படுவதாகவும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் முறையற்ற ‘கொல்லைப்புற’ வழிகளில் சேர்க்கப்படுவதாகவும் தாம் கூறிய புகாரை மீட்டுக் கொள்ளப்போவதில்லை என்று கெடா, ஜித்ரா சட்டமன்ற உறுப்பினர் ஹைம் ஹில்மான் அப்துல்லா (Haim Hilman Abdullah) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 13-ஆம் தேதியன்று அவர் ஆற்றிய உரையின் அடிப்படையில், உயர்கல்வித் துறை அமைச்சு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹில்மான், இந்த விவகாரத்தை அமைச்சு நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால், அதை எதிர்கொள்ள தகுந்த ஆதாரங்கள் மற்றும் உண்மைகளுடன் தாம் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், தமது நோக்கம் பல்கலைக்கழகங்களை விமர்சிப்பது அல்ல என்றும், மாறாக B40 மற்றும் M40 குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளின் வெளிப்படைத்தன்மையையும் நீதியையும் உறுதிப்படுத்துவதே என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதே ஹில்மான், மலேசியாவின் 5 ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் உள்ள 180,000 இடங்களில், 21 விழுக்காடு இடங்கள் உள்நாட்டு மாணவர்களைப் புறக்கணித்துவிட்டு வெளிநாட்டு மாணவர்களுக்கே முன்னுரிமையாக வழங்கப்பட்டுள்ள்ளதாக கடந்த ஆண்டும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.



