
கோலாலம்பூர், ஜூன்-9-மலேசிய அரசாங்கம் தொழிலாளர் நலனில் மேற்கொண்டுள்ள அதிரடியான சமூகப் பாதுகாப்புச் சீர்திருத்தங்கள், சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் நலனை உலக அரங்கில் நிலைநிறுத்தும் வகையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மலேசியாவின் சாதனைகளைச் சமர்ப்பித்தார்.
சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (ISSA) தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜீஸ் முகமதுவுடனான இந்த உயர்மட்டக் சந்திப்பில், மலேசிய மடானி அரசாங்கம் தொழிலாளர் நலனுக்காகச் செயல்படுத்தி வரும் பல்வேறு புதிய சட்ட மாற்றங்களை அமைச்சர் ரமணன் விளக்கிக் கூறினார்.
இந்தச் சந்திப்பில் மிக முக்கியமாக, கடந்த மார்ச் 31-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த ‘கிக் தொழிலாளர் சட்டம் 2025’ குறித்து அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்தச் சட்டம், சுமார் 1.6 மில்லியனுக்கும் அதிகமான கிக் தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதோடு, ஒரு பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்கித் தருவதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்துப் பேசிய அமைச்சர் ரமணன், “பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கம், தொழிலாளர் நலனில் சமரசம் செய்துகொள்ளாமல், அதே சமயம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தும் வகையில் சமநிலையான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, ஜூன் 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ‘லிண்டுங்24’ விபத்துக் காப்பீடு திட்டம், நாட்டின் 9 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு, பணி நேரம் மற்றும் இடத்தைக் கடந்து, முழுமையான சமூகப் பாதுகாப்பு கவசத்தை வழங்குகிறது” என்று தெரிவித்தார்.
தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் முதலாளிகளின் போட்டித்தன்மை ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து, நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு மலேசியா முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் உறுதிபடக் கூறினார்.
இந்தச் சந்திப்பானது, மலேசியாவிற்கும் சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பிற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதோடு, சமூகப் பாதுகாப்புத் துறையில் மலேசியாவின் சிறந்த நடைமுறைகளை உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் அமைந்திருந்தது.
தொழிலாளர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதில் மலேசியா எடுத்து வைத்துள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடிச்சுவடு, சர்வதேச அரங்கில் மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.



