
பாசீர் பூத்தே, செப்டம்பர்-4,மலேசியாவிலிருந்து மானிய விலையிலான நெல் உரங்கள் தாய்லாந்துக்குக் கடத்தப்பட்டு, வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மலேசியாவும் தாய்லாந்தும் இணைந்து விசாரணை நடத்தவுள்ளன.
கிளந்தான் பாசீர் பூத்தேவில் நடைபெற்ற புதிய கடல்சார் போலீஸ் தளத்தின் திறப்பு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார்.
இரு நாட்டு போலீஸாரும் இந்த விவகாரம் குறித்து அவரவர் தரப்பில் விசாரணை நடத்துவார்கள் என்றார் அவர்.
அரசாங்க அளவிலான பேச்சுவார்த்தைகள், எல்லைப் பணிக் குழு மற்றும் போலீஸ் இடையிலான நேரடித் தொடர்பு போன்ற இருதரப்பு வழிமுறைகள் மூலம் இந்த விசாரணை கையாளப்படும்.
இரு நாடுகளுக்கும் இடையே தேவையற்ற பதற்றமோ அல்லது சந்தேகமோ உருவாவதைத் தவிர்க்கவே இந்த அணுகுமுறை பின்பற்றப்படுவதாக அமைச்சர் கூறினார்.
இதனிடையே, 80 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுள்ள மண்டலம் 3 கடல்சார் போலீஸ் தளம் வரும் நவம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்றும், இது நாட்டின் கிழக்குக் கடற்கரை எல்லைப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் என்றும் சைஃபுடின் தெரிவித்தார்.
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தலைத் தடுப்பதோடு, மலேசியக் கடல் எல்லையின் இறையாண்மையைப் பாதுகாப்பதே இப்புதிய தளத்தின் முக்கிய நோக்கமாகும்.



