டாக்கா, ஆகஸ்ட் -5, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா வாஜீட் (Sheikh Hasina Wajid) பதவி விலகக் கோரி தலைநகர் டாக்காவில் வெடித்துள்ள புதிய ஆர்ப்பாட்டங்களில் மட்டும் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
மீண்டும் சாலையில் இறங்கிய பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக போலீஸ் சுட்டதிலும் கையெறி குண்டுகளை வீசியதிலும் அவர்கள் கொல்லப்பட்டனர்.
அந்த 91 பேரில் 13 போலீஸ்காரர்களும் அடங்குவர்.
வங்காளதேசத்தின் அண்மைய வரலாற்றில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஒரே நாளில் இத்தனைப் பேர் உயிரிழந்திருப்பது இதுவே முதன் முறையாகும்.
இதற்கு முன் ஆக அதிகமாக 67 பேர் ஜூலை 19-ல் உயிரிழந்தனர்.
அரசாங்க வேலைக்கான இட ஒதுக்கீட்டைக் கண்டித்து மாணவர் அமைப்பினர் அப்போராட்டங்களை அப்போது முன்னெடுத்திருந்தனர்.
இப்போது பிரதமர் பதவி விலக வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டம் திசை திரும்பியிருப்பதால், நாடளாவிய அளவில் காலவரையற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்கி 3 நாட்களுக்கு தேசிய பொதுவிடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.
2009-ல் மீண்டும் பிரதமரானதிலிருந்து வங்காளதேச அரசியலில் யாராலும் அசைக்க முடியாத இரும்புப் பெண்மணியாக வலம் வரும் 76 வயது ஹசீனா, இந்த முறை தலைத் தப்புவாரா என்பது தெரியவில்லை.