
பங்சார், நவ 4 – செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் பணியாளர்களையும் அவர்களின் அன்றாட உழைப்பையும் கொண்டாடும் சந்திப்பாக, வணக்கம் மலேசியா அலுவலகத்தில் தொடர்புத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங்கின் தீபாவளி சிறப்பு வருகை அமைந்தது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வருகை தந்த அவர், வணக்கம் மலேசியா குடும்பத்தினருடன் ஒன்றாக மதிய உணவருந்தி, பண்டிகை மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
மக்களுக்குத் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதிலும், சமூகத்தின் குரலை பிரதிபலிப்பதிலும் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அந்த வகையில், நாட்டின் தமிழ்ச்செய்தி ஊடகத் துறையில் முன்னணி நிறுவனமாக வணக்கம் மலேசியா ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டிய தியோ நீ சிங், அதன் பணியாளர்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அன்றாடச் செய்திப் பணிகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, குழுவினர் துணையமைச்சருடன் இயல்பாகக் கலந்துரையாடவும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது. அனைவருடன் உற்சாகமாக உரையாடியதோடு அவர்களின் கருத்துகளையும் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி, செய்திப் பிரிவுத் தலைவர் வேதகுமாரி வெங்கடேசன், சந்தைப் பிரிவுத் தலைவர் ஜெகனாதன் பழனிசாமி, தொழில் நுட்ப பிரிவு தலைவர் ரமேஷ் பத்மநாபன், சந்தை பிரிவு அதிகாரி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோருடன், செய்தி பிரிவுகளைச் சேர்ந்த பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
மேலும், தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் தியோ நீ சிங் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
பண்டிகை வாழ்த்துகளுடன், ஊடகப் பணியாளர்களின் உழைப்புக்கான அங்கீகாரமும் இணைந்த இந்தச் சந்திப்பு, வணக்கம் மலேசியா குழுவினருக்கு உற்சாகமளிக்கும் இனிய தருணமாக அமைந்தது.



