
ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட் 13 – அதிகளவு செயற்கை வண்ணப் பொருட்கள் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்கள் கலந்திருக்கக்கூடிய வண்ண அப்பளங்கள் (papadom/fryums) குறித்து சுகாதார அமைச்சு (KKM) உடனடியாக விசாரணை நடத்த வேண்டுமென பினாங்கு நுகர்வோர் சங்கமான CAP கோரிக்கை விடுத்துள்ளது.
CAP தலைவர் முகைதீன் அப்துல் காதர் (Mohideen Abdul Kader) கூறுகையில், இந்தியா தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை (TNFSD), அதிகளவு செயற்கை நிறமிகள் கொண்ட அப்பளங்களின் விற்பனைக்கு தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வண்ண அப்பளங்கள் மலேசியாவில் குறைந்த விலையில் எளிதாகக் கிடைப்பதாகவும், குறிப்பாக குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து, நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் வண்ண அப்பளங்களை பரிசோதித்து, அதிகளவு நிறமிகள் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாகச் சந்தையில் இருந்து அகற்ற வேண்டும் என CAP வலியுறுத்தியுள்ளது.



