Latestமலேசியா

வாட்டியெடுக்கும் வெப்பம்: KL, புத்ராஜெயா, லாபுவானுக்கு மின்சாரக் கட்டணத்தில் கழிவு வழங்க செனட்டர் பரிந்துரை

கோலாலம்பூர், மார்ச்-20, வெப்பக் காலம் நாட்டை தொடர்ந்து ஆட்டிப் படைத்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் மின்சாரக் கட்டணத்தில் கழிவுச் சலுகை வழங்குமாறு, TNB கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அம்மூன்று மாதங்களுக்குமான மொத்த மின்சாரக் கட்டணத்தில் 15 முதல் 20 விழுக்காடு வரையில் கழிவுச் சலுகையை வழங்கும் பரிந்துரையை, செனட்டர் உறுப்பினர் டத்தோ மொஹமட் இசாமுடின் யாஹ்யா செவ்வாய்க் கிழமை மேலவைக் கூட்டத்தின் போது முன்வைத்தார்.

எனினும், புத்ரா ஜெயா, கோலாலம்பூர் மற்றும் லாபுவானில் 3 லட்சம் ரிங்கிட்டுக்கும் குறைவான விலையிலான வீட்டில் வசிப்பவர்களுக்கு மட்டுமே அச்சலுகை வழங்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

“இந்த வெப்பக்காலத்தில் கூட்டரசு பிரதேசங்களைச் சேர்ந்த நாங்கள் தான் அதிகம் பாதிப்படைந்துள்ளோம். ஒவ்வொரு நாளையும் கடத்துவதென்பது பெரும் சவாலாக உள்ளது. எனவே மின்சாரக் கட்டணத்தில் கழிவுச் சலுகை வழங்கினால் சுமை குறையும்” என்றார் அவர்.

தினமும் சூடு தாங்காமல் மக்கள் மின் விசிறிகளையும், குளிரூட்டிகளையும் பன்மடங்கு அதிகமாகப் பயன்படுத்த வேண்டியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

வட கிழக்கு பருவ மழைக்காலத்தின் தற்போதைய இறுதிக் கட்டம் மே மாத கடைசி வரை நீடிக்கலாம் என மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறை கணித்துள்ளது.

அதுவரை, வழக்கத்தை விட, அதிக சூடு மற்றும் வறட்சியான சூழலை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!