
கோலாலம்பூர், ஜூலை 13 – தனது 101ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கான எளிய அறிவுரையை மக்களுடன் பகிர்ந்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், “நாம் வாழ்வதற்காகச் சாப்பிட வேண்டும்; சாப்பிடுவதற்காக வாழக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதே நல்ல உடல்நலத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தனது உடல்நிலை குறித்து பேசிய டாக்டர் மகாதீர், வயது முதிர்ந்தவர்களுக்கு இருப்பது போல தனக்கும் சில நேரங்களில் சிறிய உடல்நலக் குறைகள் ஏற்படுவதாகக் கூறினார். இருப்பினும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி மருந்துகளை எடுத்துக்கொண்டு, தொடர்ந்து தனது பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
கடந்த ஜூலை 10ஆம் தேதி, தனது 101ஆவது பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்த அனைத்து மலேசியர்களுக்கும் டாக்டர் மகாதீர் நன்றி தெரிவித்தார். தனது மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் இணைந்து வெளியிட்ட காணொளியில், பிறந்தநாள் வாழ்த்துகள், பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் அனுப்பிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்தார்.



