Latestமலேசியா

விரைந்து செயல்பட்டு, தீ பிடித்த வீட்டில் சிக்கிக் கொண்ட தந்தையையும் மகளையும் காப்பாற்றிய போலீஸ்காரர்களுக்கு குவிகிறது பாராட்டு

வங்சா மாஜூ, மார்ச் 19 – கோலாலம்பூர் வங்சா மாஜுவில் 3 போலீஸ்காரர்கள் விரைந்து செயல்பட்டதில், தீ பிடித்த வீட்டினுள் சிக்கிக் கொண்ட தந்தையும் 3 வயது மகளும் உயிர் தப்பினர்.

அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 19-வது மாடியில் நேற்று மாலை 4.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

வீட்டின் இரும்பு வேலிக்கருக்கே உள்ள மின் இணைப்பு பெட்டி திடீரென வெடித்து, தீப்பற்றியதில், 31 வயது தந்தை 3 வயது மகளோடு உள்ளே மாட்டிக் கொண்டார்.

தகவலறிந்த மனைவி, அவசரமாக வரும் வழியில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெறும் 20 மீட்டர் தூரமே உள்ள வங்சா மாஜூ போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அங்கிருந்து மூன்று போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தீயணைப்பு மீட்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, தீயணைப்பு வண்டி வந்து கொண்டிருந்த நிலையில், சிறிதும் தாமதிக்காமல் அம்மூவரும் மேலே செல்ல முடிவெடுத்தனர்.

ஆனால், தீ ஏற்பட்டு மின் தூக்கி சேவைகளும் துண்டிக்கப்பட்டிந்ததால், வேறு வழியின்றி படிகளில் ஏறி 19-வது மாடியை அவர்கள் அடைந்தனர்.

கரும்புகை சூழ்ந்திருந்த அவ்வீட்டின் கதவை 20 நிமிடங்கள் போராடி உடைத்து, உள்ளே பால்கனியில் இருந்த தந்தையையும் மகளையும் காப்பாற்றி, படியில் இறங்கி கொண்டு வந்தனர்.

உயிரைப் பணையம் வைத்து இருவரையும் காப்பாற்றிய போலீஸ்காரர்களின் வீரச் செயல் தம்மைப் பெருமைப் பட வைப்பதாக, வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் அஷாரி அபு சமா கூறினார்.

இவ்வேளையில், கணவர் மற்றும் மகளின் உயிரைக் காப்பாற்றிய போலீசுக்கு நன்றி தெரிவித்த மனைவி, வீட்டில் தீ ஏற்பட்டதை தீயணைப்பு மீட்புத் துறைக்கு தெரிவித்து விட்ட பிறகு, போலீசுக்கும் தெரிவிக்கலாமே என திடீரென தான் தனக்கு யோசனைத் தோன்றியதாக சொன்னார்.

சற்று தாமதித்திருந்தாலும், அசம்பாவிதத்தில் முடிந்திருக்கலாம் என்பதால், அம்மூன்று போலீஸ் காரர்களுக்கும் நன்றிக் கடன் பட்டிருப்பதாக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!