Latestமலேசியா

விஷத் தன்மையைக் கொண்டிருக்கும் 3 அழகுசாதனப் பொருட்களுக்கு சுகாதார அமைச்சு தடை

புத்ராஜெயா, மே 29 – மூன்று அழகுச் சாதனப் பொருட்கள் விற்பனைக்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.

அட்டவணையிடப்பட்ட நச்சுத்தன்மை அல்லது மருத்துவ நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் விஷத்தன்மையை அவை உள்ளடக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சுகாதார அமைச்சு அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் வாயிலாக, அந்த அழகுச் சாதனப் பொருட்களை மலேசியாவில் விற்க இனி அனுமதிக்கப்படாது.

மெர்குரி அல்லது பாதரசம் கலந்திருக்கும் N Glowing EWSB, Karisma Golden Turmeric Cream, SL Two Intensive ஆகியவையே அந்த அழகுச் சாதனப் பொருட்கள் ஆகும்.

சுகாதார அமைச்சின், தேசிய மருந்தக ஒழுங்குமுறை பிரிவு, சம்பந்தப்பட்ட அழகுச் சாதனப் பொருட்களின் விற்பனை அறிவிப்பை இரத்துச் செய்ததை, சுகாதார தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் முஹமட் ரட்சி அபு ஹசான் ஓர் அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.

உடலில் ஊடுருவி சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அழகுச் சாதனப் பொருட்களில் பாதரசம் தடை செய்யப்பட்டுள்ளது.

அது இளம் அல்லது கருவில் இருக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். தோலில் ஒவ்வாமை, எரிச்சல் உட்பட பிற பின் விளைவுகளுக்கும் அது இட்டுச் செல்லலாம்.

அதே சமயம், அந்த அழகுச் சாதனப் பொருட்களில் அடையாளம் காணப்பட்டிருக்கும் Hydroquinone, betamethasone ஆகிய இரு இராசயனங்களும், மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தில் பதிவுச் செய்யப்பட்டிருக்க வேண்டிய மருந்துகள். மருத்துவர்கள் அல்லது சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு ஏற்ப மட்டுமே அவற்றை பயன்படுத்த முடியும் என்பதையும் ரட்சி தெளிவுப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!