
கோலாலம்பூர், டிசம்பர்-23 – பொது மக்கள் தங்கள் வீடுகளில் Solar Panels எனப்படும் சூரிய சக்தி மின் தகடுகளைப் பொருத்துவதை ஊக்குவிக்க வழங்கப்பட்ட விலைக் கழிவுச் சலுகை, அடுத்தாண்டு ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்றத் துறை அமைச்சு அதனை அறிவித்துள்ளது.
SolaRIS எனும் அந்த சூரிய சக்தி வெகுமதி திட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் வரும் டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கும் மக்களுக்கு, நான்காயிரம் ரிங்கிட் வரையில் விலைக் கழிவுச் சலுகை வழங்கப்படுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நிகர ஆற்றல் அளவீடுத் திட்டத்தின் கீழுள்ள வழிகாட்டிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதற்கு ஏற்ப, தற்போது அச்சலுகைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விளக்கியது.
மேம்படுத்தப்பட்ட வழிகாட்டிகளுக்கு ஏற்ப, வீடுகளுக்கான கோட்டா அளவு 150 மெகாவாட்ஸ் அதிகரித்து, இனி மொத்தமாக 600 மெகாவாட்ஸ் மின்சாரம் வழங்கப்படும்.
அதே சமயம், வர்த்தகத் தளங்களுக்கும் தொழில்துறைகளுக்கும் 300 மெகாவாட்ஸ் அதிகரிக்கப்பட்டு, இனி 1,700 மெகாவாட்ஸ் மின்சாரம் வழங்கப்படுமென அமைச்சு கூறியது.
TNB கணக்கு வைத்திருக்கும் அனைத்து மலேசியர்களும் அதற்கு விண்ணப்பிக்கலாம்; ஆனால் ஒருவர் ஒரு தடவை தான் அச்சலுகையைப் பெற முடியும்.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அந்த விலைக் கழிவுச் சலுகை வழங்கப்படும்.
ஆனால், வீட்டில் சூரியத் தகடுகள் பொருத்தப்பட்ட பிறகே, TNB வாயிலாக அந்த விலைக் கழிவு வழங்கப்படும்.
இது குறித்த மேல் விவரங்கள் TNB-யின் அகப்பக்கத்திலும், SEDA எனப்படும் எரிசக்தி ஆணையம் மற்றும் நீடித்த எரிசக்தி மேம்பாட்டு அதிகாரத் தரப்பின் அகப்பக்கத்திலும் கிடைக்கும்.