
கோலாலம்பூர், அக்-13-வெளிநாட்டு முஸ்லீம்களைத் திருமணம் செய்து கொண்ட உள்ளூர் மலாய் முஸ்லீம்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை மலாய்க்காரர்களாகப் பதிவு செய்யலாம். உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail அவ்வாறு தெரிவித்திருக்கிறார். அதே சமயம் அக்குழந்தைகளை அவர்களின் வெளிநாட்டுப் பெற்றோரின் வம்சாவளியின் அடிப்படையிலும் பதிவு செய்யலாம் என அவர் கூறினார்.
மலாய் முஸ்லீம்களைத் திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டினரை பூமிபுத்ராக்களாகக் கருத முடியுமா, அவர்கள் அதற்கான உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பெற முடியுமா என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு Saifuddin அவ்வாறு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதேவேளை, மலாய் முஸ்லீம்களைத் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டவர்கள் இயல்பாகவே மலாய்க்காரராகிவிட மாட்டார்கள் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
அதோடு, ஒருவர் பூமிபுத்ரா அந்தஸ்துக்குத் தகுதியானவரா அல்லது கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்படும் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பெறத் தகுதியுடையவரா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேசியப் பதிவுத் துறைக்கு இல்லை என்றும் Saifuddin குறிப்பிட்டார்.
கூட்டரசு அரசியலமைப்பின்படி, ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றுபவராகவும், மலாய்மொழியை வழக்கமாகப் பேசுபவராகவும், மலாய் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுபவராகவும் இருக்க வேண்டும். அத்துடன், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் கூட்டரசில் பிறப்பு அல்லது வசிப்பிடம் தொடர்பான அரசியலமைப்பு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இத்தகைய வரையறைகளின் அடிப்படையிலேயே ஒருவர் மலாய்க்காரராகக் கருதப்படுகிறார் என அமைச்சர் விளக்கினார்.



