Latestமலேசியா

பட்டப்பகலில் மெர்சிடிஸ்-பென்ஸ் காரைப் பயன்படுத்தி TM கேபிள்களைத் திருடிய கும்பல் சிக்கியது

சிரம்பான், அக்-13-பட்டப்பகலில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார் மற்றும் பிக்கப் டிரக்கைப் பயன்படுத்தி டெலிகாம் மலேசியா (TM) கேபிள்களைத் திருடிய 14 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டுள்ளது. கடந்த அக்டோபர் 9ஆம் தேதி Kampung Melayu Panchorரில் உள்ள தொடக்கப்பள்ளியொன்றுக்கு அருகே கேபிள்கள் திருடப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

22 முதல் 67 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களில் இரு பெண்களும் அடங்குவர். நெகிரி செம்பிலானின் லாபு, நீலாய் மற்றும் சிலாங்கூரின் டெங்கில் பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிக்கியதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான், சிலாங்கூர், கெடா மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களில் பதிவான பல கேபிள் திருட்டுச் சம்பவங்களுக்குத் தீர்வு காண உதவியிருப்பதாக சிரம்பான் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Mohd Yatim Osman தெரிவித்தார்.

கைது நடவடிக்கையின்போது, சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ஐந்து வாகனங்கள், கேபிள்களை வெட்டும் கருவிகள், எரிக்கப்பட்ட செப்புக் கம்பிகள் அடங்கிய மூன்று மூட்டைகள், ஆடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அத்திருட்டுச் சம்பவம் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 379 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 235 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

முன்னதாக வைரலான காணொளியில், முகமூடி அணிந்த நால்வர் பல வாகனங்களைப் பயன்படுத்தி, பள்ளிக்கு வெளியே சந்திப்புக்கு அருகே கேபிள்களை இழுத்துத் திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கதது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!