
மலாக்கா, ஏப்ரல்-14-மலாக்காவில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் இரகசியமாகச் செயல்பட்டு வந்த வேலைவாய்ப்பு மோசடி கும்பலை போலீஸார் முறியடித்துள்ளனர்.
மலாக்கா தெங்காவில் உள்ள ‘தாமான் புஞ்சாக் பெர்தாம்’ (Taman Puncak Bertam) எனும் இடத்தில் உள்ள ஒரு மாடி வீட்டில், போலீஸார் அதிரடிச் சோதனை நடத்தியதில், 28 மற்றும் 38 வயதுடைய இரண்டு சீன நாட்டுப் பிரஜைகள் கைதாகினர்.
பிப்ரவரி முதல் செயல்பட்டு வந்த இந்த கும்பல், அமெரிக்காவில் வசிக்கும் சீனர்களைக் குறிவைத்து இந்த மோசடியைச் செய்து வந்துள்ளது.
கைதான இருவரும் இந்த கும்பலின் ‘வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளாக’ செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெலிகிராம் செயலி வாயிலாக, இல்லாத பகுதிநேர வேலைகளை ஆசை காட்டி இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சோதனையின் போது, சுமார் 30,000 ரிங்கிட் மதிப்பிலான மடிக்கணினிகள், கைப்பேசிகள் மற்றும் இணையக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மோசடி வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு, இருவரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
இதன் பின்னணியில் உள்ள மற்றவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



