Latestஉலகம்

அதிக சூடான உணவுக் கொட்டியதால் மகளின் தோல் வெந்துப் போனது; விமான நிறுவனத்திற்கு எதிராக பெற்றோர் வழக்கு!

சிக்காகோ, அமெரிக்கா – பிப்ரவரி 18 – விமானப் பயணத்தின் போது பணியாளர் பரிமாறிய சூடான உணவு தனது 6 வயது மகளின் மடியில் கொட்டியதில், அவளது தோல் வெந்துப் போனதாகக் கூறி, United Airlines மீது பெற்றோர் வழக்குத் தொடுத்துள்ளனர்.

2022 ஜூலையில் Tel Aviv-லில் இருந்து Newark செல்லும் போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக சிக்காக்கோவில் கடந்த வாரம் பதிவுச் செய்யப்பட்ட வழக்கு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுகளைப் பரிமாறுவதற்காக வந்த விமானப் பணிப்பெண், தள்ளுவண்டியை அச்சிறுமியின் அருகே நிறுத்தியிருக்கிறார். அப்போது டிரேயில் இருந்த சுடச் சுட உணவு நழுவி அச்சிறுமியின் மடியில் விழ, சூடு தாங்காமல் அவள் வலியால் துடித்திருக்கிறாள்.

உணவுத் தட்டையோ பொட்டலத்தையோ தள்ளுவண்டியில் அடுக்கும் போதே, அது விழாதிருப்பதை விமானப் பணிப்பெண் கவனமாக உறுதிச் செய்திருந்தால், தங்கள் பிள்ளைக்கு அந்நிலை ஏற்பட்டிருக்காது; அதோடு 12 மணி நேர விமானப் பயணம் நெடுகிலும் அவள் வலியாலும் அசௌகரியத்தோடும் இருந்திருக்க வேண்டியிருக்காது என வழக்கு மனுவில் அவர்கள் மேலும் கூறினர்.

தீப்புண் காயங்களுக்குத் தேவைப்படும் போதிய மருந்து வசதிகளும் அதன் போது விமானத்தில் இல்லை என பெற்றோர் குற்றம் சாட்டினர்.

கவனக்குறைவாக இருந்ததாக விமான நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், சரியான சூட்டில் உணவைப் பரிமாறவில்லை, பழுதான உணவுத் தள்ளுவண்டியைப் பழுதுப் பார்க்கவில்லை, முறையான மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தரவில்லை என பெற்றோர் குற்றச்சாட்டை அடுக்கியுள்ளனர்.

எனவே, அச்சம்பவத்திற்கும், மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட இனி அதனால் அவள் அனுபவிக்கப் போகும் பிரச்னைகளுக்கு எல்லாம் சேர்த்து 75 ஆயிரம் டாலரை விமான நிறுவனத்திடம் இருந்து பெற்றோர் இழப்பீடாக கேட்டிருக்கின்றனர்.

இவ்வேளையில், உடனடி அறிக்கை எதனையும் வெளியிடாத சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்து விட்டதால் எதுவும் கருத்துரைக்க முடியாது என்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!