Latestஉலகம்

அமெரிக்காவில் காணாமல் போன தனியார் ஜெட் விமானம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரிக்கடியில் கண்டுபிடிப்பு

வெர்மோன்ட், அமெரிக்கா – ஜூன்-15 – அமெரிக்காவில் காணாமல் போய் அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆன தனியார் ஜெட் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெர்மோன்ட் ( Vermont) மாநிலத்தின் ச்சாம்ளேய்ன் (Champlain) ஏரிக்கு அடியில் அண்மையில் அவற்றைக் கண்டதாக தேடுதல் குழு கூறியது.

53 ஆண்டுகளுக்கு முன் 2 பணியாளர்கள், மற்றும் பிரபல சொத்துடைமை நிறுவனத்தின் 3 ஊழியர்களோடு பயணமான அந்த தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி Champlain ஏரியில் விழுந்ததாக நம்பப்படுகிறது.

அந்த 5 ஆடவர்களையும் தேடி மீட்க 1971-ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 17 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவை பலன் தரவில்லை.

இந்நிலையில் அதிநவீன கருவிகளின் துணையுடன் கடந்தாண்டு தேடல்-மீட்புப் பணிகள் மீண்டும் துரிதப்படுத்தப்பட்டதில், ஒருவழியாக விமானத்தின் உடைந்த பாகங்களை தேடுதல் குழு நெருங்கியது.

அச்சிறிய விமானத்தின் கதவு, இத்துப் போன இஞ்சின் (engine), விமானி அறைக்குள் இருந்த சாதனங்கள் போன்றவை தேடுதல் குழுவின் கேமராவில் சிக்கின.

காணாமல் போனவர்களின் வாரிசுகள் வாழும் காலத்திலேயே விமானத்தின் நிலை குறித்து அவர்களுக்கு தெரிய வந்திருப்பது குறித்து தேடுதல் குழு மகிழ்ச்சித் தெரிவித்தது.

என்றாலும், விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சரியான இடம் குறித்த தகவல் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

காரணம், அது ஒரு மயான இடமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!