கோலாலம்பூர், ஏப் 30 -மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையமான MCMC யும் போலீசும் தற்போதைய அரசாங்கத்துடன் அரசியல் ரீதியாக இணைந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய பதிவேட்டாளர் Murray Hunter ருக்கு எதிராக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் போலீசில் புகார் செய்துள்ளது . ஹண்டரின் கூற்றை MCMC மறுத்ததோடு அது முற்றிலும் ஆதாரமற்றது என்று தெரிவித்திருக்கிறது. ஒரு சட்டப்பூர்வ அமைப்பு என்ற முறையில் MCMC தனது கடமைகள் மற்றும் பொறுப்புகளை 1998 ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் மற்றும் அதன் அனைத்து துணை சட்டங்களின்படி செயல்படுத்தி வருகிறது. MCMC யால் எடுக்கப்பட்ட அனைத்து அமலாக்க நடவடிக்கைகளும் நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துறையின் கட்டுப்பாட்டாளராக இருக்கும் MCMC யின் அதிகார வரம்பில் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளின்படி உள்ளன என்று அந்த ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Murray Hunter ரின் எழுத்துக்கள் அவதூறானவை என்பதோடு MCMC யை அவர் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருப்பதோடு அந்த அமைப்பு சுயநலத்திற்காக தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் மக்களை MCMC யும் அரச மலேசிய போலீஸ் படையும் மிரட்டுவதாகவும்
குற்றஞ்சாட்டியுள்ளார். மற்றொரு தரப்பினரைத் தொல்லைத்தரும் நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பான தகவலை பரப்புவது 1998ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 பிரிவின் கீழ் ஒரு குற்றமாகும். MCMC-யை அவமதிக்கும் மற்றும் சிறுமைப்படுத்தும் உள்ளடக்கத்தை பதிவேற்றும் செயலும் ஒரு குற்றமாகும். MCMC மீது Murray Hunterருக்கு எந்தவொரு புகார் இருக்குமானால் அதிகாரப்பூர்வ புகாரை அவர் செய்திருக்க வேண்டும். Murry Hunter மற்றும் இதர தரப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் போலீசில் புகார் செய்திருப்பதாக அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.