Latestமலேசியா

ஆண்டுதோறும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 5 தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்; வெற்றி அறக்கட்டளை கோரிக்கை

புத்ராஜெயா, டிசம்பர் 8 – நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அவற்றை களைவதற்கான பரிந்துரைகளையும், அண்மையில் புத்ராஜெயாவில், மனிதவள அமைச்சர் சிவக்குமாருடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது, வெற்றி அறக்கட்டளை செயலவை உறுப்பினர்கள் முன் வைத்துள்ளனர்.

ஆண்டுதோறும் குறைந்த மாணவர்களை கொண்ட ஐந்து தமிழ்ப் பள்ளிகள் இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும். அதற்காக வரவுச் செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஐந்து கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அந்த சந்திப்பிற்கு, மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ம. வெற்றிவேலன் தலைமையேற்றார்.

அதன் வாயிலாக, குறைந்த மாணவர்களை கொண்ட தமிழ்ப்பள்ளிகளை நிரந்தரமாக மூடுவதில் இருந்து காப்பாற்ற முடியும் என்பதோடு, இந்திய மாணவர்களுக்கான தமிழ்க் கல்வி வாய்ப்புகளையும் விரிவுப்படுத்த முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தற்சமயம், நாட்டிலுள்ள 26 தமிழ்ப்பள்ளிகள், பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ளனர்.

அதில், ஆண்டுதோறும் ஐந்து பள்ளிகளை இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதன் வாயிலாக, ஐந்தாண்டுகளில் 25 பள்ளிகள் எதிர்நோக்கும் மாணவர் பற்றாக்குறை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், பிள்ளைகள் தங்கள் ஆரம்ப கல்வியை தமிழ் மொழியில் மேற்கொள்வதை உறுதிச் செய்ய, தமிழ்ப் பள்ளிகளில் கட்டாயம் பாலர் பள்ளிகளை அமைக்கப்பட வேண்டும் என்பதோடு, எஸ்.பி.எம் தேர்வில் தமிழ்மொழியை மாணவர்கள் தேர்வுப் பாடமாக எடுப்பதற்கு சில இடைநிலைப்பள்ளிகளே தடைகளை விதிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

தமிழ் மொழி போதனை நடைபெறுவதை உறுதிச் செய்ய, இடைநிலைப்பள்ளிகள் அல்லது தேசிய பள்ளிகளில் நிலவும், தமிழ் மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வுக் காண்பது, தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை வசதிகள், மேம்பாடு, திட்டமிடல், ஆசிரியர்களை பணியமர்த்தல், பதவி உயர்வு, புதிய பள்ளிகளை கட்டுவது, இடமாற்றம் ஆகியவற்றை ஒருங்கிணைக்க ஏதுவாக, மாநில கல்வி இலாக்காக்களில் தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்பு பிரிவை அமைப்பது ஆகியவையும் அவர்களின் பரிந்துரைகளில் உள்ளடங்கியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!