
புத்ராஜெயா, அக்டோபர்-2,GB Daily Glow Skin Cream எனும் அழகுசாதனப் பொருளில் நச்சுத்தன்மை வாய்ந்த பாதரசம் (Mercury) கலந்திருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதன் விற்பனைக்கு சுகாதார அமைச்சு அதிரடித் தடை விதித்துள்ளது.
அந்தப் பொருளுக்கான அங்கீகாரப் பதிவை உடனடியாக இரத்துச் செய்துள்ளதாக KKM அறிவித்துள்ளது.
பாதரசம், சருமத்தின் வழியே உடலுக்குள் ஊடுருவி, சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பெருமளவில் பாதிக்கும் ஆபத்து கொண்டது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதோடு, கருவில் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் மூளை வளர்ச்சியை இது கடுமையாகப் பாதிக்கும்; தவிர, தீவிர தோல் ஒவ்வாமையையும் ஏற்படுத்தும்.
எனவே, பொது மக்கள் இந்தக் கிரீமைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், ஏதேனும் பாதிப்புகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இத்தடையை மீறி அந்தப் பொருளை விற்கும் நபர்களுக்கு 25,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இதுவே நிறுவனங்கள் என்றால், முதல் குற்றத்திற்கு தலா 50,000 ரிங்கிட் வரையிலும், மீண்டும் மீண்டும் என்றால் 100,000 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.



