
கோலாலாம்பூர், ஜூலை-1-அனைத்து உணவகங்கள் மற்றும் உணவு வளாகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக குடிநீர் அதாவது ஆரோக்கியமான வெற்று நீர் வழங்குவதைக் கட்டாயமாக்குமாறு, சுகாதார மற்றும் சமூகக் கொள்கைக்கான மையமொன்று அரசாங்கத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் போன்ற சுகாதாரப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் இலவசமாகத் தூய்மையான குடிநீர் கிடைப்பது, பொது மக்கள் இனிப்பு கலந்த பானங்களை வாங்குவதைக் குறைக்கும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்தக் கொள்கை பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அத்தியாவசிய தேவைக்கான மக்களின் அன்றாடச் செலவைக் குறைக்கவும் உதவும் எனக் கூறப்படுகிறது.
இந்த ஆரோக்கியமான பரிந்துரைக்கு உணவுத் துறை நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான சட்ட அமுலாக்க வழிமுறைகளைச் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



