Latestமலேசியா

இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்த சட்டமா? உள்துறை அமைச்சர் மறுப்பு

புத்ராஜெயா, மார்ச் 2- நாட்டிலுள்ள இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்காக 1984ஆம் ஆண்டு அச்சு இயந்திர மற்றும் பிரசுரச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுவதை உள்துறை அமைச்சு மறுத்துள்ளது. அந்த சட்டம் தொடர்பாக விவாதங்கள் நடத்தப்பட்டு வந்தபோதிலும் விதிமீறல் மற்றும் அபராதத் தொகையை அதிகரிப்பதை மட்டுமே அவ்விவாதம் நோக்கமாகக் கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.

இணைய ஊடகங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திருத்தங்கள் தொடர்பில் நாங்கள் திட்டமிடவில்லை என்பதோடு இதன் தொடர்பில் எந்த தரப்பிடமிருந்தும் எங்களுக்கு எவ்விதமான பரிந்துரையும் வரவில்லை என்று அவர் கூறினார். மேலும் ஊடக மன்றத்தை அமைப்பதற்கு உள்துறை அமைச்சு எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளிவந்த தகவலையும் சைபுதீன் மறுத்தார்.

எதிர்வரும் ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மலேசியா ஊடக மன்ற உருவாக்கம் தொடர்பான மசோதா மீது எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றும் அவர் சொன்னார். ஊடக மன்றத்தை உருவாக்குவது தொடர்பான சட்டங்களை சட்டத் துறை அலுவலகம் தற்போது தயாரித்து வருவதாகவும் பின்னர் அது அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு அடுத்தக் கட்டமாக நாடாளுன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ஊடகங்கள் இதற்கு முன் செய்தி வெளியிட்டிருந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!