ஜெய்ப்பூர், ஜூன்-12, இந்தியாவின் ராஜஸ்தானில் வெறும் 300 ருபாய் மதிப்பிலான போலி நகைகளை 6 கோடி ருபாய் கொடுத்து வாங்கி ஏமாந்துள்ளார் அமெரிக்க பெண்ணொருவர்.
ச்செரிஷ் (Cherish) எனும் அந்த அமெரிக்க பெண் ஜெய்ப்பூரில் தங்க நகைக்கடை வைத்திருக்கும் கவுரவ் சோனி ( Gavrav Soni) என்பவருடன் 2022-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார்.
இந்திய தங்க நகைகள் மீது ஆர்வம் கொண்ட ச்செரிஷ், சோனியிடம் இருந்து 6 கோடி ரூபாய்க்கு நகைகளை வந்து வாங்கிச் சென்றுள்ளார்.
ஆனால் அவை தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியின் போது அந்நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்ட போது தான் அவை போலியானது எனத் தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த அவர் உடனே இந்தியா புறப்பட்டு வந்து கவுரவ் சோனியிடம் சண்டையிட்டுள்ளார்.
ஆனால் ஏமாற்றிய அப்பெண்ணோ, நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது என கைவிரிக்க, ச்செரிஷ் அமெரிக்க தூதரக அதிகாரிகளின் உதவியுடன் போலீசில் புகாரளித்தார்.
இது தெரிந்து தலைமறைவாகியுள்ள அப்பெண்ணையும் உடந்தையாக இருந்த அவரின் தந்தையையும் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது.