Latestஇந்தியாஉலகம்மலேசியா

இந்தியாவுக்கு ஒரு விஜய்… மலேசியாவுக்கு எப்போது?” – வைரலாகும் தெங்கு சாஃப்ருல் வீடியோ

கோலாலம்பூர், மே-14-தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய் குறித்து, முன்னாள் அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ சாஃப்ருல் அசிஸ் வெளியிட்டுள்ள சமூக ஊடக வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

சுமார் 30 ஆண்டுகள் சினிமாவில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த விஜய், இன்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகப் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதை சாஃப்ருல் வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.

“இது வெறும் திரைப்பிரபலத்தால் கிடைத்த வெற்றியல்ல; மக்கள் மத்தியில் உண்மையாகவே ஒரு மாபெரும் ‘விஜய் அலை’ வீசியதால்தான் இந்த மகுடம் அவருக்குச் சாத்தியமானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நடிகருக்கு இத்தகைய உயரிய அரசியல் அங்கீகாரம் கிடைப்பது இந்தியாவில் மட்டும் எப்படித் தொடர்ந்து சாத்தியமாகிறது என ஆச்சரியம் தெரிவித்துள்ள சாஃப்ருல், மலேசியச் சூழலோடு அதனை ஒப்பிட்டுப் பேசினார்.

“மலேசியாவிலும் பல திறமையான நடிகர்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிட்டும் உள்ளனர். ஆனால், எவராலும் அரசியலில் பெரிய அளவில் தடம் பதிக்க முடியவில்லை” என அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்தியாவுக்கு ஒரு விஜய் இருப்பது போல, மலேசியாவிலும் ஒரு ‘விஜய்’ உருவானால் அவர் யாராக இருப்பார்? அது எப்போது நடக்கும்?” என்ற எதிர்பார்ப்புடன் கூடிய கேள்வியோடு அந்த வீடியோவை அவர் நிறைவு செய்துள்ளார்.

​தமிழகத்தில் விஜய்யின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடங்கி மலேசியாவின் முன்னணி அரசியல் தலைவர்கள் வரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!