Latestமலேசியா

இந்திய பிரஜை சடலத்தை பெற்றுச் செல்வதற்கு காஜாங் மருத்துவமனை விதித்த 15,261 ரிங்கிட்டை தள்ளுபடி செய்த சுகாதார அமைச்சுக்கும் அரசாங்கத்திற்கும் கமலநாதன் நன்றி

கோலாலம்பூர், ஜன 3 – மலேசியாவில் வேலை செய்து வந்த இந்திய பிரஜையான தமிழ் நாட்டின் சிவகங்கையில் குறத்தி என்ற ஊரைச் சேர்ந்த சிலம்பரசன் அண்மையில் வயிற்று வலி காரணமாக காஜாங் மருத்துவமனையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவரது சடலத்தை ஒப்படைப்பதற்கு அந்த மருத்துவமனை விதித்த 15,261 ரிங்கிட் கட்டணத்தை தள்ளுபடி செய்த சுகாதாரத் துறை மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு, மலேசிய அனைத்துலக மனிதநேயத் தலைவர் டாக்டர் த.கமலநாதன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நவம்பர் 8ஆம் தேதி காஜாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலம்பரசனுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோதிலும் அடுத்த இரண்டொரு நாளில் அவர் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் சிலம்பரசனின் சடலத்தை பெறுவதற்கு கோலாலம்பூர் வந்து இங்கேயே அடக்கம் செய்வதற்கு அவரது மனைவி திட்டமிட்டிருந்தார்.

உடலை ஒப்படைப்பதாக இருந்தால் 15,261 ரிங்கிட் செலுத்த வேண்டும் என காஜாங் மருத்துவமனை கூறியதால் அவ்வளவு பணம் இல்லை என்பதால் அந்த சடலத்தை பெற்று தகனம் செய்துவிடும்படி மலேசிய உலக மனிதநேய தலைவர் டாக்டர் த.கமலநாதனை, சிலம்பரசனின் மனைவி கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, சுகாதார துறையின் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக சந்தித்து சிலம்பரசன் குடும்பத்தினரிடம் வசதியில்லை என்பதால் தகனம் செய்வதற்கு அவர் முன் வருவதாக கமலநாதன் தெரிவித்தார்.

அதோடு, காஜாங் மருத்துவமனை கோரியிருந்த 15,261 ரிங்கிட்டை ரத்துச் செய்யும்படியும் அவர் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரது இந்த கோரிக்கையை சுகாதார அமைச்சு அனுமதித்ததால் டிசம்பர் 20ஆம் தேதி காஜாங் மருத்துவமனையிலிருந்து சிலம்பரசன் சடலத்தை எடுத்து வந்து செராஸ் இந்து மயானத்தில் தாம் அடக்கம் செய்ததோடு மறுநாள் டெம்பிளர் பார்க்கில் அவரது அஸ்தியை கரைத்ததாகவும் கமலநாதன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!